SELANGOR

செந்தோசா தொகுதியில் இவ்வாண்டில் இதுவரை 18 முறை மலிவு விற்பனை- குணராஜ் தகவல்

கிள்ளான், மே 19- செந்தோசா சட்டன்றத் தொகுதியில் இவ்வாண்டு
ஜனவரி முதல் இதுவரை 18 முறை மாநில அரசின் மலிவு விற்பனை
நடத்தப்பட்டுள்ளதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ் கூறினார்.

இம்மாதத்தில் மட்டும் இதுவரை ஐந்து இடங்களில் ஜெலாஜா ஏசான்
ரக்யாட் எனும் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை
நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
ஆதரவிலான இந்த விற்பனை தாமான் செந்தோசா, தாமான் மஸ்னா,
தாமான் மெனாரா மாஜூ உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன என்று
அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்ட இந்த
மலிவு விற்பனைக்கு பொது மக்கள் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மலிவான விலையில் தரமான
பொருள்ளை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டத்தின்
மூலம் கணிசமான தொகை மிச்சப்படுத்த முடிகிறது என்ற பொது மக்கள்
கூறுகின்றனர் என்றார் அவர்.

இந்த விற்பனை குறித்து அதிகமானோர் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக
சமூக ஊடகங்கள், மின் பதாகைகள் மற்றும் ஜே.டி.எம். குழுவினர் மூலம்
விளம்பரப்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி
10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும்
கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு
பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00
வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :