NATIONAL

பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் பலி

டுங்கூன், மே 19: இன்று அதிகாலை 8.53 மணியளவில் புக்கிட் பீசி, அஜில் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல்பிடி) 2இன் கிலோமீட்டர் 375இல் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மேலும் ஒரு பயணி இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சூ சியா டான் (44), மார்பில் பலத்த காயம் அடைந்த நிலையில் டுங்கூன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட் பஹாருடின் அப்துல்லா தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதல் நபர், ஹோண்டா தொழிற்சாலையின் மேலாளர் தான் போ அவ் (42) என அடையாளம் காணப்பட்டதாகவும், உடல் பிரேதப் பரிசோதனைக்காக டுங்கூன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், 30 பயணிகளை ஏற்றிச் சென்ற அப்பேருந்து தம்பின், நெகிரி செம்பிலானிருந்து கோலா திரங்கானுவில் உள்ள ரெடாங் தீவுக்குச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

“பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் சறுக்கி எதிர் பாதையில் நுழைவதற்கு முன்பு சாலைத் தடுப்பில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

காயமடைந்த மற்ற பயணிகள் உலு திரங்கானு மருத்துவமனை மற்றும் டுங்கூன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக பஹாருடின் கூறினார்.

26 வயதான பேருந்து ஓட்டுனரின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

“இச்சம்பவத்தின் போது, வானிலை நன்றாக இருந்தது, சாலை வறண்டு இருந்தது மற்றும் சம்பவ இடத்தில் விளக்குகள் இல்லாமல் (விடியற்காலை) இருட்டாக இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

– பெர்னாமா


Pengarang :