SELANGOR

10,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜோப்கேர் திட்டம் ஜுன் மாதம் தொடங்கும்

ஷா ஆலம், மே 19- வரும் ஜூன் மாதம் தொடங்கி மாநிலத்தின் ஒன்பது
மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஜோப் கேர் வேலை வாய்ப்புச்
சந்தையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பினை
பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் திறன் மேம்பாட்டுப் பிரிவு (யு.பி.பி.எஸ்.) மற்றும் சொக்சோ
எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த
வேலை வாய்ப்புச் சந்தையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200
நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில்
வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெறும். மாநிலத்தில் வேலை தேடிக்
கொண்டிருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்
கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.

இம்மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற்ற 2023 சிலாங்கூர்
கார்னிவெல் கெர்ஜாயா சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தையில் 120
பேருக்கு வேலை கிடைத்தத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

மேலும் 959 பேருக்கு இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மே 6ஆம் தேதி வரை யு.பி.பி.எஸ்.
மாநிலம் முழுவதும் மேற்கொண்ட வேலை வாய்ப்புச் சந்தைகளின்
வாயிலாக 2,500 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகக் கணபதிராவ்
முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :