NATIONAL

நாசி லெமாக் கடையை கார் மோதியது- ஒன்பது பேர் காயம்

அலோர்ஸ்டார், மே 19- கட்டுப்பாட்டை இழந்த கார் நாசி செலமாக்
கடையை மோதியதில் ஒன்பது பேர் காயங்களுக்குள்ளாயினர். அவர்களில்
மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் ஜாலான் ஹோஸ்பிட்டல், தாமான் சூரியா ஜித்ரா அருகே
இன்று காலை மணி 8.25 அளவில் நிகழ்ந்ததாக குபாங் பாசு மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரோட்ஸி அபு ஹசான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் அந்த கடையின் அருகே இருந்த மூன்று கார்கள் மற்றும்
ஆறு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்ததாக அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.

கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் சத்ரியா ரகக்கார் சாலையோரம்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை மோதியப் பின்னர் அந்த கடையின்
எதிரே வரிசையில் நின்ற கூட்டத்தினர் மீது பாய்ந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமுற்றனர். நாசி லெமாக்
விற்பனையாளர்களான கணவன் மனைவி உள்பட மூவர் கடுமையான
காயங்களுக்குள்ளாயினர். காயமடைந்த அனைவரும் சுல்தானா பாஹ்யா
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும்
அதேவேளையில் சம்பவ இடத்திலிருந்த சாட்சிகளிடமும் வாக்குமூலம்
பதிவு செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

விபத்தில் சிக்கிய காரை செலுத்திய ஆடவருக்கு வாகனமோட்டும்
லைசென்ஸ் இல்லை என்பதோடு காரின் சாலை வரி மற்றும்
காப்புறுதியும் காலாவதியாவிட்டது என்றார் அவர்.


Pengarang :