SELANGOR

“சித்தம்“ அமைப்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஞாயிறு அன்று 9 தொகுதிகளில் நடைபெறும்

ஷா ஆலம், மே 19- சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின்
(சித்தம்) ஏற்பாட்டிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மாநிலத்திலுள்ள 9
சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவிருக்கின்றன.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் கூடுதல் வருமானம்
பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சிகளை
வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக சித்தம் நிர்வாகி
எஸ். கென்னத் சேம் கூறினார்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக செமினி இந்திய சமூகத் தலைவர் நடேசன்
ஏற்பாட்டில் சேலை உடுத்தும் பயிற்சி வரும் 21ஆம் தேதி காஜாங்
நகராண்மைக் கழகத்தின் 20 மற்றும் 21வது மண்டல கவுன்சிலர்
அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும் என்று அவர்
சொன்னார்.

ரவாங் தொகுதியில் தேவ செல்வம் மற்றும் விமல் ராஜ் ஏற்பாட்டில் முக
ஒப்பனை மற்றும் சிகையலங்காரப் பயிற்சி ரவாங், கம்போங் மிலாயு
சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும்.

தெராத்தாய் தொகுதியில் ராஜன் ஏற்பாட்டிலான முக ஒப்பனை பயிற்சி
அம்பாங், சமூக மண்டபத்தில் காலை 9.00 மணிக்கும்,

ஸ்ரீ செத்தியா தொகுதியில் சாமிநாதன் ஏற்பாட்டில் ஒப்பனை மற்றும் சேலை உடுத்தும்
பயிற்சி சுங்கைவே, ஸ்ரீ செத்தியா பல்நோக்கு மண்டபத்திலும் நடைபெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கென்னத் தெரிவித்தார்.

தாமான் மேடான் தொகுதியில் அசோகன் ஏற்பாட்டில் மருதாணி வரையும்
பயிற்சி பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடான் தாமான் ஸ்ரீ மஞ்சாவிலும்,
ஈஜோக் தொகுதியில் குணசேகரன் ஏற்பாட்டிலான அணிச்சல் (கேக்) தயாரிக்கும் பயிற்சி தாமான் பஞ்சாரான் பாலாய் ராயாவிலும் நடைபெறவுள்ளன.

கோத்தா டாமன்சாரா தொகுதியில் திருமதி தேவி ஏற்பாட்டில் மலர்
அலங்காரப் பயிற்சி , ஷா ஆலம், செக்சன் யு5, டேவான் மாத்தா
ஹரியிலும் ,பலாக்கோங் தொகுதியில் கிறிஸ்டி லுய்ஸ் ஏற்பாட்டில்
மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி, தாமான் மூர்னி சமூக மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் நடைபெறும்.

காஜாங்  தொகுதியில் ராஜ்குமார் ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சி, காஜாங்  தொகுதி சேவை மையத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணி  வரையில் நடைபெறும் என கென்னத் கூறினார்.


Pengarang :