SELANGOR

பண்டார் கின்றாரா-பூச்சோங் இணைப்புச் சாலை வழி புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் நெரிசல் குறையும்

சுபாங் ஜெயா, மே 22- பண்டார் கின்றாரா (பி.கே.) 5பி முதல் பூச்சோங்
தொழிலியல் பூங்கா வரையிலான இணைப்புச் சாலைத் திட்டம் புக்கிட்
ஜாலில் நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க
உதவும்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் 22 லட்சத்து 80 ஆயிரம்
வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த இணைப்புச் சாலை
வாகனமோட்டிகளின் பயண நேரத்தையும் குறைக்கும் என்று கின்றாரா
சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது, பூச்சோங் ஜெயா செல்லும் பண்டார் கின்றாரா
குடியிருப்பாளர்கள் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் சென்று “யு“
திருப்பத்தில் திரும்ப வேண்டும். இதனால் அவர்கள் போக்குவரத்து
நெரிசலில் சிக்க நேர்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் வரும் அக்டோபர் மாதம் முற்றுப்பெற்றப் பின்னர்
அருகிலுள்ள பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள்
நேரத்தை மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர்
தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பண்டார் கின்றாரா பூச்சோங், பிகே5 எம்.பி.எஸ்.ஜே.
மண்டபத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் பண்டார் கின்றாரா சுற்றுவட்டாரத்தைச்
சேர்ந்த சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். இந்த பொது உபசரிப்பில்
கலைநிகழ்ச்சி, தேக்வாண்டோ, சீலாட், ஆடை அலங்காரப் போட்டி,
அதிர்ஷடக் குலுக்குப் போன்ற அங்கங்களும் இடம் பெற்றன.


Pengarang :