NATIONAL

நிறுவைக் கருவிகளின் பயன்பாட்டை ஓராண்டு காலத்தில் நிறுத்த அரசு முடிவு

புத்ராஜெயா, மே 22- நிறுவை இயந்திரங்களின் பயன்பாட்டை இப்போது
தொடங்கி ஓராண்டு காலத்தில் முற்றாக நிறுத்த அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது. அதற்கு மாற்றாக மின்னியல் எடை கருவிகள்
பயன்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த முடிவு தொடர்பில் நிறுவை இயந்திரம் சார்ந்த
தொழில் துறையினர் மற்றும் அமலாக்கத் தரப்பினருடன் பேச்சு
நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

தற்போது சந்தையில் 25 விழுக்காட்டு மின்னியல் நிறுவை இயந்திரங்கள்
மட்டும் பயன்பாட்டில் உள்ளன. எடை மற்றும் அளவை தொடர்பான
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினருடன் அமைச்சு
தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது என்று அவர் மேலும்
தெரிவித்தார்.

நேற்று, இங்குள்ள பேரங்காடி ஒன்றில் அனைத்துலக வானிலை தினக்
கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய நிறுவை இயந்திரத் திட்டத்தை அமல்படுத்தும் போது எழக்கூடிய
அதன் தொடர்பிலான பிரச்சனைகளையும் அரசாங்கம் கவனத்தில்
கொள்ளும். குறிப்பாகப் போதுமான மின்னியல் நிறுவை இயந்திரக்
கையிருப்பு, அவற்றின் விலை ஆகியவற்றோடு அந்த கருவியை
வணிகர்கள் பெறுவதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்படும்
என்றார் அவர்.

இந்த மின்னியல் நிறுவைக் கருவிகளை விநியோகிப்பது தொடர்பில்
அமைச்சு நன்கு ஆய்வு செய்து சில நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது
என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :