NATIONAL

நாட்டின் நுழைவாயில்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் குடிநுழைவு அதிகாரிகள் நியமனம்- அமைச்சர் சைபுடின் தகவல்

போர்ட்டிக்சன், மே 22- நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் குறிப்பாகக்
கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் உள்ள நுழைவாயில்களில் நிலவும்
பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல் அதிகாரிகளை குடிநுழைவுத்
துறை பணியமர்த்தவுள்ளது.

முதல் கட்டமாக, நேற்றுடன் பயிற்சியை முடித்துள்ள 100 அதிகாரிகள்
ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் அபு பாக்கார் கட்டிடம் மற்றும் சுல்தான்
அபு பாக்கார் காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட இடங்களில் அமர்த்தப்படுவர் என்று
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில்
கூறினார்.

மேலும் 100 அதிகாரிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்
(கே.எல்.ஐ.ஏ.1) மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய இடங்களில் பணியைத்
தொடர்வர் என்று அவர் தெரிவித்தார்.

பணியமர்த்தல் ரீதியாக இவ்விரு இடங்களிலும் அதிகாரிகள் பற்றாக்குறை
நிலவியதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கு
நாங்கள் அனுப்புகிறோம். இதற்கு முன்னர் நாங்கள் தற்காலிக
அடிப்படையில உருவாக்கிய உடனடி நடவடிக்கை குழு தவிர்த்து இந்த
புதிய நியமனங்கள் வாயிலாக அந்த நுழைவாயில்களில் நிலவும் நெரிசல்
பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

நாட்டில் மொத்தம் 140 நுழைவாயில்கள் உள்ளன. அனைத்து முக்கிய
நுழைவாயில்களிலும் நெரிசலைக் குறைக்க கூடுதல் அதிகாரிகளை அங்கு
அனுப்பவிருக்கிறோம் என்று இங்குள்ள மலேசியன் இமிகிரேஷன்
அகாடமியில் பயிற்சியை முடித்து வைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறை சேவை, லெவி மற்றும் ஆள்பல மறுசீரமைப்பு
உள்ளிட் பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஆண்டுக்கு 520 கோடி
வெள்ளியை வருமானமாக ஈட்டித் தருவதாகவும் சைபுடின் கூறினார்.


Pengarang :