NATIONAL

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் கொள்கைகள் குறித்து விவாதம்

கோலாலம்பூர், மே 22- உலக பொருளாதார சுணக்கத்திற்கு  மத்தியில்  நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கு .ஒற்றுமை அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மக்களவை கூட்டத்தின் முதல் நாளான இன்று கேள்வி எழுப்பப்படும்.

இதன் தொடர்பான கேள்வியை லாருட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் எழுப்புவார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தங்களைச் சட்ட ரீதியாக தற்காத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ஏதுவாக குற்றச் செயல் தொடர்புடைய வழக்குகளில் சட்ட உதவி வழங்க வகை செய்யும் பொது தற்காப்புச் சட்டத்தை உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று கோத்தா பாரு பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ தாக்கியுடன் ஹசான் கேள்வியெழுப்புவார்.

இலக்கவியல் வணிகத்தை பிரபலப் படுத்துவதற்கும் உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்துலகச் சந்தையில் நுழைவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சரிடம் டாமன்சாரா தொகுதி பக்கத்தான் உறுப்பினர் கோவிந்த் சிங் டியோ வினவுவார்.

அரச மலேசிய ஆகாயப்படைக்குச் சொந்தமான சுக்கோய் 30-எம்கேஎம் ரக போர் விமானங்களின் விநியோகிப்பாளரான ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் அந்த விமானங்களுக்குத் தேவையான உபரி பாகங்களைப் பெறுவதற்கு மலேசியா செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து தானா மேரா உறுப்பினர் டத்தோஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஜிஸ் தற்காப்பு அமைச்சரிடம் கேள்வியை முன்வைப்பார்.


Pengarang :