NATIONAL

ஐ-சீட் வாயிலாகக் காஜாங் சரஸ்வதி அவர்களுக்கு முக ஒப்பனை சாதனங்கள் விநியோகம்

காஜாங், மே 22- குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த தொழில்
முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களை வழங்கி அவர்களை
பொருளாதார ரீதியில் உயர்த்தும் உன்னதப் பணியை ஐ-சீட் எனப்படும்
சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு
இலாகா மேற்கொண்டு வருகிறது.

சமூக பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்
தலைமையில் செயல்படும் இந்த அமைப்பின் வாயிலாக
நூற்றுக்கணக்கான இந்திய தொழில் முனைவோர் இதுவரை பலன்
பெற்றுள்ளனர்.

அந்த வகையில் காஜாங், தாமான் புக்கிட் மேவாவில் முக ஒப்பனைத்
தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ். சரஸ்வதிக்கு 7,000 வெள்ளி மதிப்பிலான
மூன்று விதமான முக மற்றும் சிகையலங்கரிப்பு சாதனங்கள் இம்மாதம்
19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்களைக் காஜாங் சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான ஹீ லோய் சியான்
சரஸ்வதியிடம் ஒப்படைத்ததாக காஜாங் தொகுதி இந்திய சமூகத்
தலைவர் ராஜ்குமார் பெருமாள் கூறினார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் இந்த ஒப்பனைத்
தொழிலை விரிவாக்கம் செய்யும் நோக்கில் சரஸ்வதி செய்த
விண்ணப்பத்தை ஏற்று உபகரணங்களை வழங்கிய ஐ-சீட்
பொறுப்பாளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்
சொன்னார்.

இந்த வர்த்தக உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் உலு லங்காட் ஐ-
சீட் நடவடிக்கை அதிகாரி ஆர்.குகநாதன், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் பாலமுரளி ஆகியோரும் கலந்து கொண்டதாக ராஜ்குமார்
தெரிவித்தார்.


Pengarang :