NATIONAL

புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயைப் பழுது பார்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது

ஷா ஆலம், மே 22- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணியை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இன்று காலை 9.00 மணி முதல் மேற்கொண்டு வருகிறது.

இந்த பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக ஷா ஆலம் மற்றும் கோல சிலாங்கூரில் பாதிப்புக்குள்ளான 99 இடங்களில் நீர் விநியோகம் வரும் புதன்கிழமை இரவு 9.00 மணி அளவில் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அபாஸ் அப்துல்லா கூறினார்.

இந்த பழுதுபார்ப்பு பணிகள் வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடியற்காலை 3.00 மணியளவில் முற்றுப்பெறும் என்றும் பிரதான நீர் விநியோகிப்பு முறை நிலைப்படுத்தப்பட்ட உடன் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் சொன்னார்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மருத்துவமனை, கிளினிக், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் நல்லடக்கச் சடங்கு நடைபெறும் வீடுகளை இலக்காகக் கொண்டு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

 நான்கு ஓரிட சேவை மையங்கள் வாயிலாகவும் பொது மக்கள் மாற்று குடிநீர் சேவையைப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, நீர் விநியோகத் தடை எதிர் கொள்வதற்கு ஏதுவாக போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும் அதேவேளையில் நீரை சிக்கனமாகவும் பயன்படுத்தும்படி பொது மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :