NATIONAL

சீனி விலை கட்டுப்பாட்டில் இருப்பதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும்- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், மே 22- சீனி விலை கட்டுப்பாட்டில் இருப்பதையும் அந்த
அடிப்படை உணவுப் பொருளுக்கு பொது மக்கள் கூடுதலாக செலவு
செய்வதை தவிர்க்கவும் அரசாங்கம் புதிய வழிமுறைகளை தொடர்ந்து
ஆராய்ந்து வரும்.

கச்சா பொருள்களின் விலையும் இயற்கை எரிவாயுவின் விலையும்
தொடர்ந்து உயர்வு கண்ட போதிலும் பொது மக்கள் சீனியை
கட்டுப்படுத்தப்ட்ட விலையில் வாங்குவதை உறுதி செய்வதற்கான
வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவோம் என்று உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின்
ஆயோப் கூறினார்.

மக்களவையில் இன்று பாத்தாங் சாடோங் ஜி.பி.எஸ். உறுப்பினர் ரோடியா
ஷாபியி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
சொன்னார்.

உணவுப் பொருள்களின் விலை அபரிமித உயர்வு கண்ட காரணத்தால்
ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் காலத்தின் போது பொதுமக்களின்
வாங்கும் சக்தி குறைந்தது தொடர்பில் ரோடியா கேள்வியெழுப்பியிருந்தார்.

நாட்டில் சீனி உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை அபரிமித
உயர்வு கண்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்த சலாவுடின், சமையல்
எண்ணெய், அரசி, ரோன்95 பெட்ரோல் உள்பட 43 விதமான பொருள்களின்
விலையை அமைச்சு கட்டுப்படுத்தியுள்ளது என்றார்.

கடந்த ஆறு மாத காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6
விழுக்காடு அதிகரிப்பைக் கண்டதற்கு உள்நாட்டுத் தேவை வலுவாக
இருந்ததே காரணம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :