SELANGOR

ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்குத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் துறையினர் பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

கிள்ளான், மே 22- குற்றச்செயல்களைத் தடுப்பது மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற தங்களின் வழக்கமான பணிகளைத் தாண்டி மக்களுக்கு உதவிகளை வழங்கும் தன்னார்வலர்களாகவும் அரச மலேசிய காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

பொருளாதாரச் சுமையையும் நேர விரயத்தையும் பொருட்படுத்தாமல் சமூகத்தின் உயர்வில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் இப்பணி பெரிதும் போற்றுதலுக்குரியது.

 அந்த வகையில் அண்மையில் அனுசரிக்கப்பட்ட 216வது போலீஸ் தினத்தை முன்னிட்டு தென் கிள்ளான் மாவட்ட காவல் துறையின் இந்திய அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இம்மாவட்டத்திலுள்ள ஐந்து தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்ளை அன்பளிப்பாக வழங்கினர்.

தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, வாட்சன் தமிழ்ப்பள்ளி மற்றும் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் உதவிப் பொருள்களைப் பெற்றன.

தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் சுமார் 100 வெள்ளி மதிப்புள்ள பள்ளி உபகரணங்களை காவல் துறையினரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜா தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்தில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய தென் கிள்ளான் மாவட்ட காவல் துறையின் இந்திய அதிகாரிகளுக்குப் பள்ளியின் சார்பாகத் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :