NATIONAL

கைவிடப்பட்ட கட்டிடங்களை அந்நியத் தொழிலாளர் குடியிருப்புகளாகப் பயன்படுத்த மாநில அரசு திட்டம்

கிள்ளான், மே 22- சிலாங்கூரில் குறிப்பாக வர்த்தக மையப் பகுதிகளில்
உள்ள கைவிடப்பட்ட கட்டிடங்களை அந்நியத் தொழிலாளர்களுக்கான
தற்காலிக குடியிருப்பாக (டி.எல்.கியூ.) மாநில அரசு பயன்படுத்தும்.

இந்நடவடிக்கையின் வாயிலாக சமூகப் பிரச்சனைகளுக்கும் அந்நியத்
தொழிலாளர்களை உட்படுத்திய குடியிருப்பு பிரச்சனைக்கும் தீர்வு காண
இயலும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங்
ஸீ ஹான் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களை அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து
அப்புறப்படுத்தும் திட்டத்திற்கேற்ப வர்த்தக மையங்களில் உள்ள
கைவிடப்பட்ட கட்டிடங்களை டி.எல்.கியூ. குடியிருப்பாக நாங்கள்
மாற்றவிருக்கிறோம் என அவர் சொன்னார்.

இந்நோக்கத்திற்கு அனைத்துக் கட்டிடங்களும் பொருத்தமானவையாக
இருக்காது. இருந்த போதிலும் அந்நியத் தொழிலாளர்களுக்கு
பொருத்தமான குடியிருப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பில்
முதலாளிகள் நகர திட்டமிடல் தரப்பினருடன் கலந்தாலோசிக்கலாம்
என்றார் அவர்.

இங்குள்ள பண்டார் புக்கிட் திங்கியில் இன்று அந்நியத் தொழிலாளர்கள்
குடியிருப்பு மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களைக் கருத்தில்
கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் குடியிருப்பு மீதான வழிகாட்டி
வரையப்பட்டுள்ளதாகவும் இங் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அந்நியத் தொழிலாளர்களுக்கு
முறையான குடியிருப்பு வசதி இல்லாத காரணத்தால் அவர்கள் மத்தியில்
பரவிய பெருந்தொற்று அனைத்து இடங்களுக்கும் எளிதாக ஊடுருவியது.

அதன் பின்னர் இந்நோயைக் கட்டுப்படுத்துவது கடினமானப் பணியானது
என அவர் சொன்னார்.


Pengarang :