NATIONAL

ஜனவரி முதல் மார்ச் வரை வெ.18,473 கோடி முதலீட்டு வாய்ப்புகளை மலேசிய ஈர்த்தது

கோலாலம்பூர், மே 23- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒன்பது
நாடுகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட
அதிகாரப்பூர்வ மற்றும் முதலீட்டு, வர்த்தக ஊக்குவிப்புத் பயணங்கள்
வாயிலாக அபரிமித முதலீட்டு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா
பெற்றுள்ளது.

இக்காலக்கட்டத்தில் 18,473 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டு
வாய்ப்புகளும் 322 கோடி வெள்ளி மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளும்
பெறப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் (சபா,சரவா மற்றும் சிறப்பு
விவகாரங்கள்) டத்தோ அர்மிஸான் முகமது அலி கூறினார்.

இந்த மூன்று மாத காலத்தில் இந்தோனேசியா, புருணை, சிங்கப்பூர்,
தாய்லாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, கம்போடியா, சீனா
ஆகிய நாடுகளுக்கு பிரதமர் வருகை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவது
மற்றும் மலேசியாவுக்கும் சம்பந்தப்பட்ட அந்நாடுகளுக்கும் இடையிலான
இரு வழி உறவை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில்
பிரதமரின் இந்தப் பயணம் அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று குபாங் கிரியான் தொகுதி பெரிக்கத்தான்
நேஷனல் உறுப்பினர் துவான் இப்ராஹிம் துவான் மான் எழுப்பிய
கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சரின் இந்த பதில் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம்
பெற்றுள்ளது.

இவ்வாண்டு மார்ச் வரை பிரதமர் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட
பயணத்திற்கான செலவினம் மற்றும் அந்த பயணத்தின் வாயிலாக
நாட்டிற்கு கிடைத்த முதலீடுகள் குறித்து துவான் இப்ராஹிம் வினா
தொடுத்திருந்தார்.


Pengarang :