NATIONAL

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட நால்வர் கைது

கோலாலம்பூர், மே 23- அம்பாங், பாண்டான் பெர்டானாவில் உள்ள
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வெள்ளியன்று கும்பலாகச்
சேர்ந்த கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உள்பட
நால்வரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

பத்தொன்பது முதல் 40 வயது வரையிலான அந்நால்வரும் ஜாலான்
சன்பெங்கில் உள்ள மலிவு விலை அடுக்குமாடி வீடொன்றில் நேற்று
விடியற்காலை 4.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.

சம்பவ தினத்தன்று எண் பட்டை இல்லாத கருப்பு நிற மோட்டார்
சைக்கிளில் வந்த ஏற்கனவே அறிமுகம் ஆன இரு ஆடவர்கள்
பாதிக்கப்பட்ட நபரை அணுகியதாக அவர் சொன்னார்.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்த நபர் கீழே இறங்கி
பழங்கள் வெட்டும் கத்தியைக் கொண்டு அந்த ஆடவரைத் தாக்கியதோடு
அவரிடமிருந்து பணப்பை மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு
தப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெட்டுக் காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த
ஆடவருக்கு இடது கையில் 11 தையல்கள் போடப்பட்டதாக அறிக்கை
ஒன்றில் முகமது பாரூக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட 29 வயது ஆடவர் இக்கொள்ளைச் சம்பவத்தில்
ஈடுபட்டவர்களுக்கு அறிமுகமானவர் என்றும் பழிவாங்கும் நோக்கில் இந்த
கொள்ளைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் தன் காதலியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி
வந்துள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த அப்பெண்ணின்
உறவினர்களான சந்தேகப் பேர்வழிகள் அவ்வாடவருக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் அவரை தாக்கி கைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :