NATIONAL

மூன்று மாநிலங்களில் நிகழ்ந்த கொள்ளை, வாகனத் திருட்டு தொடர்பில் ஐவர் கைது

மலாக்கா, மே 23- மலாக்கா, சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் கொள்ளை
மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது
செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300,000 வெள்ளி மதிப்புள்ள
பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இம்மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சிலாங்கூர் மற்றும் மலாக்காவில்
மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஓப்ஸ் பிந்து நடவடிக்கையின் வாயிலாக 38
முதல் 53 வயது வரையிலான அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக
மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா கூறினார்.

இம்மாதம் 17ஆம் தேதி பிற்பகல் 2.32 மணியளவில் பத்து பிரண்டாம்,
தாமான் சொங்கேட்டிலுள்ள வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளை மற்றும்
வாகனத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஓப்ஸ் பிந்து அதிரடிச்
சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இம்மாதம் 18ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கிள்ளான், தாமான் பாயு
பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மறு
நாள் 19ஆம் தேதி காப்பார், தாமான் வாங்கியில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையில் நான்காவது ஆடவரும் அன்றைய தினம் மலாக்கா
செங்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் ஐந்தாவது
ஆடவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

கைதான நால்வர் மீது குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள்
தொடர்பான முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளது விசாரணையில்
தெரியவந்ததோடு அவர்கள் அனைவரும் போதைப் பொருளை
உட்கொண்டிருந்தது மருத்துவச் சோதனையில் கண்டறியப்பட்டது என்றார்
அவர்.

கைதான ஆடவர்களிடமிருந்து விலையுர்ந்த மதுபானங்கள்,
மடிக்கணினிகள், கைபேசிகள், கைக்கடிகாரங்கள் பல்வேறு நாடுகளின்
நாணயங்கள் மற்றும் மூன்று வாகனங்களும் கைப்பற்றப்பட்டன என்று
அவர் மேலும் சொன்னார்.


Pengarang :