SELANGOR

பலாக்கோங் தொகுதியில் “சித்தம்“ ஏற்பாட்டில் நடைபெற்ற குழந்தை பராமரிப்பு பயிற்சியில் 20 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 23- “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில்
ஆர்வலர் மையம் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் திறன்
மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

குறைந்த வருமானம் பெறும் தரப்பிரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர்
உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த திட்டங்களை
அந்தந்த தொகுதியிலுள்ள இந்திய சமூகத் தலைவர்கள் முன்னின்று
ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பலாக்கோங் தொகுதி இந்திய சமூகத்
தலைவர் கிறிஸ்டி லுய்ஸ் பிரான்சிஸ் ஏற்பாட்டில் மகளிருக்கான
மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த ஒரு நாள் பயிற்சியில் பிரசவத்திற்குப் பிந்தைய தாய், சேய்
பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் குறித்து தெளிவாக
விளக்கம் தரப்பட்டது. இங்குள்ள தாமான் மூர்னி சமூக மண்டபத்தில்
காலை 9.30 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த
பயிற்சியில் தொகுதியைச் சேர்ந்த 20 மகளிர் பங்கு கொண்டு
பயனடைந்தனர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ், மூலிகைகள்,
அசல் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் பங்கு கொண்டவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள
தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய பயிற்சியை வழங்குவதற்கும்
அதன் மூலம் உபரி வருமானம் பெறுவதற்கும் இந்த பயிற்சி துணை
புரியும் என்று கிறிஸ்டி நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த பயிற்சியை நடத்துவதற்கு தங்களுக்குத் பெரிதும் துணை புரிந்த
சித்தம் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.


Pengarang :