NATIONAL

குழி தோண்டும் பணியின் போது இரு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஜெர்த்தே, மே 24- செபெராங் ஜெர்த்தேவில் உள்ள திறந்த வெளி மண்டபம்
அருகே நிலத்தைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த
மண்வாரிய இயந்திர ஓட்டுநர் இரு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 32 வயதுடைய அந்த ஆடவர்
மண்வாரி இயந்திரத்தின் மூலம் குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்த
போது இவ்விரு வெடி குண்டுகளைக் கண்டதாகப் பெசுட் மாவட்டப் போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரோசாக் முகமது கூறினார்.

குழி தோண்டும் பணியின் போது வெள்ளி நிறத்தில் நீள் உருளை வடிவில்
வெடிகுண்டைப் போல் காட்சியளித்த பொருள் அந்த ஓட்டுநரின் கண்ணில்
தட்டுப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் நேராக
ஜெர்த்தே போலீஸ் நிலையம் வந்து தகவலைத் தெரிவித்தாக அப்துல்
ரோசாக் சொன்னார்.

தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பெசுட் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் ஆயுதப் பிரிவு மற்றும் திரங்கானு மாநிலப் போலீஸ்
தலைமையகத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு உறுப்பினர்கள் சம்பவ
இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில 60எம்.எம். மோர்ட்டார்
வகை எறிபடை குண்டுகள் துருபிடித்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டன.
வெடி குண்டு அகற்றும் பிரிவினர் மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த
குண்டுகளை வெடிக்கச் செய்தனர் என்றார் அவர்.


Pengarang :