SELANGOR

கோம்பாக் செத்தியா மலிவு விற்பனையில் 500 கோழிகள் ஒரு மணி நேரத்தில் விற்பனை

கோம்பாக், மே 24- கோம்பாக் செத்தியா தொகுதி நிலையில் இன்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் ஒன்றரை மணி நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

இது தவிர இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட 300 பாக்கெட் மீன் மற்றும் 300 பாக்கெட் மாட்டிறைச்சியும் வெகு விரைவில் விற்பனையானதாக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் நடவடிக்கை பிரிவு உதவி நிர்வாகி முகமது பிர்டாவுஸ் மசோரி கூறினார்.

வழக்கமாக மலிவு விற்பனை நடைபெறும் இடங்களில் எல்லாம் கோழி, முட்டை மற்றும் அரிசி போன்ற பொருட்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்து விடும் என்று அவர் சொன்னார்.

ஜூன் மாத மலிவு விற்பனைக்கான அட்டவணை முழுமை பெற்று விட்டது. இந்த விற்பனையை நடத்துவதற்கு தொகுதிகளிலிருந்து தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த விற்பனையில் அதிகமாக இல்லத்தரசிகளும் மூத்த குடிமக்களும் கலந்து கொண்டனர் என அவர் குறிப்பிட்டார்.

கோம்பாக், கம்போங் சங்காட்டில் நடைபெற்ற இந்த விற்பனையில் காலை 11.30 மணியளவில் அரிசி, சமையல் எண்ணெய், முட்டை ஆகியவை மட்டுமே எஞ்சியிருந்தன என  அவர் மேலும் சொன்னார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


Pengarang :