NATIONAL

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பின் எதிரொலி- கோலாலம்பூர் மக்களிடையே மன அழுத்தப் பிரச்சனை உயர்வு

கோலாலம்பூர், மே 24- விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிருமாண்ட
பேரங்காடிகள், பல்வேறு அடிப்படை வசதிகள் என ஜனரஞ்சக
வாழ்க்கையின் அடையாளமாக கோலாலம்பூர் மாநகரம் திகழ்ந்தாலும்
இன்னோரு புறத்தில் இந்த ஆடம்பரத்தின் உச்சமே நகரவாசிகளின் மன
உளைச்சலுக்கும் காரணமாக விளங்குகிறது.

கிராமப்புற மக்களைக் காட்டிலும் நகர்ப்புற மக்கள் குறிப்பாகக் கோவிட்-19
பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பு காரணமாக மனோரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்களின் சொகுசான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய
நிர்பந்தம் காரணமாக மாநகரவாசிகள் கூடுதல் வருமானத்தை
ஈட்டுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு
ஆளாவதாக மலேசிய மன நல சங்கத்தின் தலைவரும் மன நல
நிபுணருமான பேராசியர் டத்தோ டாக்டர் அண்ட்ரூ மோகன்ராஜ்
கூறுகிறார்.

நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கைச் சூழல் கிராமப்புற மக்களின்
வாழ்க்கையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. வசதியான
வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடும் மாநகர்வாசிகள்
நிதியை முறையாக நிர்வகிக்க இயலாமல் பெரும் கடனில் சிக்கிக்
கொள்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில்
பலர் வேலையை இழக்கும் சூழலுக்கு ஆளானதோடு வாழ்க்கைச்
செலவின அதிகரிப்பும் அவர்களுக்கு பெரும் நெருக்குதலைத் தந்தது. இது
நகர்ப்புறவாசிகள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பதற்குரிய
சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றார் அவர்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே
அதிகம் மன அழுத்தம் மற்றும் அச்ச உணர்வுக்கு ஆட்பட்டதாகச் சுகாதார
அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கடந்த மார்ச் மாதம்
கூறியிருந்தார்.


Pengarang :