NATIONAL

சுபாங் ஜெயாவில் கடந்த வாரம் சுமார் 3,000 டிங்கி சம்பவங்கள் பதிவு

சுபாங் ஜெயா, மே 24- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 2,945 டிங்கி காய்ச்சல்
சம்பவங்கள் பதிவாகின. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 1,292
சம்பவங்கள் மட்டுமே இங்கு அடையாளம் காணப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.

மாநகரின் 12 இடங்களில் இந்த டிங்கி சம்பவங்கள் அடையாளம்
காணப்பட்டதாகக் கூறிய சுபாங் ஜெயா டத்தோ பண்டார் முகமது பவுஸி
முகமது யாத்திம், அவற்றில் எட்டு இடங்கள் அடுக்குமாடி
குடியிருப்புகளாகும் என்றார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண புகையைப் பயன்படுத்தும் அணுகுமுறை
சரிபட்டு வராது, காரணம் இதன் மூலம் கொசக்களை மட்டுமே கொல்ல
முடியும். கொசுக்களை முற்றாக அழிப்பதில் குடியிருப்பாளர்களின்
ஒத்துழைப்பும் எங்களுக்குப் பெரிதும் தேவைப்படுகிறது என அவர்
சொன்னார்.

மாநகர் மன்றம் ஏற்பாடு செய்யும் கொசு ஒழிப்புத் திட்டங்களில் பொது
மக்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக இவ்விவகாரம் தொடர்பில் அடுக்குமாடி
குடியிருப்பாளர் நிர்வாக மன்றங்களுடன் நாங்கள் பேச்சு
நடத்தவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கொசு வளரும் இடங்களை
அடையாளம் கண்டு அழிப்பதற்கு வாரத்தில் பத்து நிமிடங்களைச்
செலவிடுவதன் மூலம் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில்
குடியிருப்பாளர்களும் அடுக்குமாடி நிர்வாகத்தினரும் தங்களுக்கு
ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :