NATIONAL

மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னுரிமை- சுபாங் ஜெயா டத்தோ பண்டார் வலியுறுத்து

சுபாங் ஜெயா, மே 25- மக்களின் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகார்கள்
மீது உடனடி நடவடிக்கை எடுப்பதில் முன்னுரிமை அளிக்கும்படி சுபாங்
ஜெயா மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஜே.) பணியாளர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பான நடவடிக்கை மற்றும்
உத்தரவைப் பெறுவதற்கு மாநகர் மன்ற ஊழியர்கள் எந்நேரமும் தயார்
நிலையில் இருக்க வேண்டும் என சுபாங் ஜெயா டத்தோ பண்டார் முகமது
பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதில்
அனைத்து ஊழியர்களும் மாநகர் மன்றத்தின் கண்களாகவும்
காதுகளாகவும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உதாரணத்திற்கு, நாம் வரும் வழியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
அல்லது சாலையில் மூடப்படாதக் குழிகளைக் கண்டால் அடுத்தக் கட்ட
நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக உடனடியாகச் சம்பந்தப்பட்ட
துறைகளிடம் புகார் அளிக்க வேண்டும் என அவர் சொன்னார்.

புகார்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் வாயிலாக 1,600 ஊழியர்களைக்
கொண்ட நாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய
பங்காற்றக்கூடிய குழுவாக விளங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய அதிகாரத்
துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளை மாநகர் மன்ற
ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநகர் மன்ற ஊழியர்கள் தங்களின் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த
கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு முறையான வேலை
நெறியையும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.


Pengarang :