NATIONAL

வெ.640,000 லஞ்சம் பெற்றதாக டத்தோ ரோய், மற்றும் எம்.ஏ.சி.சி. அதிகாரி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 25 –  முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ   முஹிடின் யாசின்  மகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் 400,000 வெள்ளி லஞ்சம்  கோரியது மற்றும் பெற்றது தொடர்பாக  டத்தோ ரோய் என அழைக்கப்படும்  வர்த்தகரான   முகமது ஹூசேன் முகமது நாசீர்  மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்
(எம்.ஏ.சி.சி) அதிகாரியான முகமது ரஷிடி முகமது சைட்  ஆகியோர் மீது இங்குள்ள செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  கூட்டாகக்  குற்றஞ் சாட்டப் பட்டது.

54 வயதுடைய டத்தோ  ரோய்   மற்றும்   43 வயதுடைய  முகமது ரஷிடி ஆகியோர் தங்களுக்கு எதிரான  குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

எம்.ஏ. சி.சியின் விசாரணைக்கு உள்ளான  முஹிடின் யாசின்  மகன்  டத்தோ  ஃபாக்ரி யாசினைக் கைது செய்யாமல் இருப்பதற்கு  தங்களுக்கு  400,000 வெள்ளி  லஞ்சம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரியதாக  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சித்தி டலினா பெர்ஹான்   என்பவரிடம்  அந்த லஞ்சப் பணத்தை அவர்கள் கோரியதாகக்  கூறப்பட்டது. மார்ச்  5ஆம் தேதி   பங்சார், லோரோங் கூராவில்   ஒரு உணவகத்தில்  9.00 மணி  முதல் 11.00 மணிக்கு மிடையே  இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது  ஃபாக்ரி யாசின்  கைது செய்யப்படாமல் இருப்பதற்காகக்   கையூட்டாக சைட் ஃபாரிட் சைட் அல்-அத்தாஸிடம்   240 ,000 வெள்ளி லஞ்சம்  பெற்றதாக  அவ்விருவர் மீதும் இரண்டாவது குற்றச்சாட்டு   கொண்டு வரப்பட்டது.

கடந்த மார்ச்  6 ஆம் தேதி டேசா ஹர்த்தாமாஸில் உள்ள துரித உணவகத்தில் நண்பகல்  2.00 மணிக்கும்  மாலை  4.00 மணிக்கு இடையே  இந்தக்  குற்றத்தை அவர்கள் புரிந்ததாகக் கூறப்பட்டது,


Pengarang :