NATIONAL

நாட்டில் பரம ஏழைகளின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சி

கோலாலம்பூர், மே 25- கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல்
இவ்வாண்டு மே 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் பரம
ஏழைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 124,744லிருந்து
118,217ஆக குறைந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

அதே காலக்கட்டத்தில் ஏழைகளாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின்
எண்ணிக்கையும் 304,911லிருந்து 299,080ஆக குறைந்துள்ளதை பிரதமர்
துறையின் கீழுள்ள அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவின் இகாசே டைனமிக்
தரவுகள் காட்டுகின்றன என்று துணைப் பொருளாதார அமைச்சர் டத்தோ
ஹனாபியா ஹஜார் தாயிப் கூறினார்.

முழுமையான வறுமையின் அளவு 5.6 விழுக்காடாகவும் கடுமையான
வறுமையின் அளவு 0.4 விழுக்காடாகவும் இருந்ததாக 2019ஆம் ஆண்டு
குடும்ப வருமானம், செலவு மற்றும் அடிப்படை வசதிகள் கணக்கெடுப்பு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இறுதி செய்யும் பணியில்
மலேசிய புள்ளி விபரத்துறை ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கை
இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படலாம் என்றும்
மக்களவையில் இன்று அவர் சொன்னார்.

வறுமை அளவைக் குறைப்பதற்கும் பரம ஏழை நிலையை
அகற்றுவதற்கும் கடந்த ஆறு மாதக் காலமாக அரசாங்கம் மேற்கொண்ட
நடவடிக்கைகள் குறித்து பாசோக் தொகுதி உறுப்பினர் முகமது ஷியாஹிர்
சே சுலைமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் ஹனிபா இவ்வாறு
தெரிவித்தார்.

மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறியதைத் தொடர்ந்து நாட்டில்
ஆள்பலச் சந்தையும் மேம்பாடு கண்டுள்ளதாக கூறிய அவர், கடந்த
2020ஆம் ஆண்டு மே மாதம் 5.3 விழுக்காடாக இருந்த வேலையில்லா விகிதம் இவ்வாண்டு மார்ச் மாதம் 3.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றார்.


Pengarang :