SELANGOR

தெராத்தாய் தொகுதியில் ஜூன் 6 முதல் மூன்று நாட்களுக்கு மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 30- வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி
வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அம்பாங் வட்டாரத்தில் மலிவு
விற்பனையை தெராத்தாய் சட்டமன்றத்தின் ஒருங்கிணைப்பு சேவை
மையம் நடத்தவுள்ளது.

செமெரா அடுக்குமாடி குடியிருப்பு தாமான் புக்கிட் செகார், தாமான் புத்ரா
சமூக மண்டபம், பாண்டான் பெர்டானா தேசிய பள்ளி வளாகம் ஆகிய
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறும் என்று தொகுதி
ஒருங்கிணைப்பு அதிகாரி எலிஸ் டான் கூறினார்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்று அத்தியாவசியப்
பொருள்களை மலிவான விலையில் வாங்கிக் கொள்ளும்படி சுற்று
வட்டார மக்களைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி
வரை நடைபெறும். பொருள்களை வாங்குவோர் உள்நாட்டினர் என்பதை
உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்கள் தங்கள் அடையாளக் கார்டை காட்ட
வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்
நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட்
மாட்டிறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் மீன் 6.00 வெள்ளிக்கும் 5
கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு
நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 20
லட்சம் பேர் பயனடைந்தனர்.


Pengarang :