NATIONAL

கோத்தா டாமன்சாரா தொகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 280 பேர் பங்கேற்றனர்

ஷா ஆலம், மே 30- கோத்தா டாமன்சாரா இந்திய சமூகத் தலைவர் தேவி
முனியாண்டி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இலவச மருத்துவப்
பரிசோதனை இயக்கத்தில் சுமார் 280 பேர் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 7, எம்.பி.பி.ஜே. சமூக மண்டபத்தில் காலை
9.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வை
சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்
தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராகச்
சுங்கை பூலோ தொகுதி பி.கே.ஆர். தலைவரும் தொகுதியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சிவராசா கலந்து கொண்டார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் இரத்த, சிறுநீர்
சோதனை மற்றும் கண் பார்வை தொடர்பான சோதனையோடு பெக்கா பி40
எனப்படும் மத்திய அரசின் உதவித் திட்டத்திற்கான பதிவும்
நடத்தப்பட்டதாக திருமதி தேவி முனியாண்டி கூறினார்.

இந்த மருத்துவ சோதனை இயக்கத்தில் கோத்தா டாமன்சாரா, கம்போங்
காயு ஆரா, டாமன்சாரா டாமாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களோடு
தொகுதிக்கு வெளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டதாக அவர்
தெரிவித்தார்.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்திற்குப் பொதுமக்கள் மத்தியில்
கிடைத்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு தொகுதியின் இதர
இடங்களிலும் இதுபோன்ற மருத்துவ பரிசோதனை இயக்கங்களை நடத்த
தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு
உதவி புரிந்த சிவராஜா, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்களான தாங் ஃபூய் கோ, ஜி.சுரேஷ் மற்றும் வட்டாரத் தலைவர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :