NATIONAL

RM2.618 மில்லியனுக்கும் அதிகமான செலவில் சாலைகளைப் பராமரிக்கும் பணி – பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

பெட்டாலிங் ஜெயா, மே 31: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாக பகுதியில் உள்ள சாலைகளைப் பராமரிக்க RM2.618 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.

பெரிய அளவிலான சாலை மறுசீரமைப்புப் பணிக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் செலவழிக்கப் பட்டுள்ள வேளையில்  மீதத் தொகையைச் சாலைகளில் உள்ள குழிகளை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது எனப் பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் அஷான் எம்.டி அமீர் கூறினார்.

மொத்தம் 4.5 கிலோமீட்டர் சாலைகளில் 850 மீட்டர்கள் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் 500க்கும் மேற்பட்ட பாதைகள் மேம்படுத்தப்பட்டன என்று அவர் விளக்கினார்.

இன்று நடைபெற்ற பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி கூட்டத்திற்குத் தலைமை வகித்து பேசிய முகமட் அஸான், தனது தரப்பு 6.4 கிலோமீட்டர் சாலையை RM2 மில்லியன் செலவில் வரும் ஆகஸ்ட் மாதம் சரி செய்யும் என்றார்.

இதற்கிடையில், சாலைப் பராமரிப்பு பணிகளில்  செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழிகளை கண்டறிதல் நடவடிக்கை ஜூன் முதல் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“இந்த முறையின் மூலம் சாலை சேதத்தைக் கண்டறிந்து, உடனடியாகப் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :