NATIONAL

மக்களின் வருமானத்தைப் பெருக்கக் காளான் வளர்ப்புத் திட்டம்- புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூன் 1- தொகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கும்
முயற்சியாக காளான் வளர்ப்புத் திட்டத்தைப் புக்கிட் மெலாவத்தி
சட்டமன்றத் தொகுதி அறிமுகப்படுத்தவுள்ளது.

இரு கிராமங்களை உள்ளடக்கிய இந்த முன்னோடித் திட்டம் வெகு
விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

தொகுதி மக்கள் கூடுதல் வருமானம் பெற்று பொருளாதார ரீதியில்
மேம்பாடு காண்பதை உறுதி செய்யும் நோக்கில் தனது சொந்த
முயற்சியில் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

தொடக்க கட்டமாக இந்த திட்டத்திற்கு கம்போங் தஞ்சோங் சியாம் மற்றும்
கம்போங் புக்கிட் கூச்சிங் ஆகிய இரு கிராமங்களை நாங்கள்
தேர்ந்தெடுத்துள்ளோம். வரவேற்பு சிறப்பாக இருந்தால் இத்திட்டத்தைப் பிற
கிராமங்களுக்கும் விரிவுபடுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தலா 30 பேர் இத்திட்டத்தில்
பங்கேற்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனக் கூறிய அவர்,
அவர்களுக்கு முறையான வழிகாட்டிப் பயிற்சிகளை தேர்ச்சி பெற்ற
ஆலோசகர்களும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் வழங்குவர்
என்றார்.

இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள அவ்விரு கிராமங்களைச் சேர்ந்த
மக்கள் புக்கிட் மெலாவத்தி தொகுதி சேவை மையம் அல்லது கிராமத்
தலைவர்கள் மூலம் இதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம் என்று அவர்
குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் பங்கேற்போருக்குக் காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சி,
மூலப் பொருள்கள், அறுவடை மற்றும் விற்பனை தொடர்பில்
முழுமையான விளக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :