SELANGOR

சுங்கை துவா தொகுதி மலிவு விற்பனையில் பொருள்கள் வாங்க 400 பேர் திரண்டனர்

கோம்பாக், ஜூன் 1- சுங்கை துவா தொகுதி நிலையில் இன்று காலை
நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் 400 பேர்
வரை திரண்டனர். காலை 7.30 மணி முதல் பொது மக்கள் திரண்டதன்
மூலம் இந்த விற்பனை நிகழ்வு வரலாற்றுப்பூர்வ சாதனையைப் பதிவு
செய்தது.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கிய போதிலும் 9.00
மணிக்கே இவ்விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 350 வரிசை
எண்களும் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) நிர்வாகப் பிரிவு
உதவியாளர் நோராஸியாத்தி ஹசான் கூறினார்.

இந்த மலிவு விற்பனை பொது மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவைப்
பெற்றுள்ளது என்று பத்து கேவ்ஸ், டேவான் ராக்யாட்டில் நடைபெற்ற
இந்த விற்பனையின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

மேலும் அதிகமான மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக இந்த
விற்பனையை சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு இடங்களில்
தொடர்ந்து நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, இத்தொகுதியில் இம்மாதம் நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ள ஐந்து மலிவு விற்பனைகளில் இது முதல் நிகழ்வாகும்
என்று சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியின் சேவை மைய அதிகாரி
பி. சண்முகம் கூறினார்.

பொது மக்களுக்கு உதவி நல்கும் வகையில் உணவுக் கூடை மற்றும்
குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு வருகை புரிவது போன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இவ்வாண்டு செப்டம்பர்
முதல் தேதி வரை தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :