NATIONAL

சட்டமன்ற கலைப்பு தேதி தொடர்பான அஸ்மின் அலியின் அறிவிப்பு பண்பற்றச் செயலாகும்- பி.கே.ஆர். சாடல்

ஷா ஆலம், ஜூன் 6- சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் இம்மாதம் 19ஆம்
தேதி கலைக்கப்படும் என்ற டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் அறிவிப்பு ஒரு
பண்பற்றச் செயலாகும் என வர்ணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பில்
மாநில அரசு நிர்வாக வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை
அந்த முன்னாள் மந்திரி புசார் புறந்தள்ளி விட்டதை அவரின் இச்செயல்
புலப்படுத்துவதாக உள்ளது என்று மாநில கெஅடிலான் கட்சியின்
தலைமைத்துவ மன்ற அமைப்புச் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது
கூறினார்.

அஸ்மின் அவசரக்காரர் என்பதை அவரது இந்த அறிவிப்பு காட்டுகிறது
எனக் கூறிய சைபுடின், விவேகமான முறையில் கடைபிடிக்க வேண்டிய
அடிப்படைக் கூறுகளை அவர் மறந்து விட்டது போல் தோன்றுகிறது
என்றார்.

தங்கள் அரசியல் விளையாட்டில் அரசு நிர்வாகத்தை சம்பந்தப்படுத்த
வேண்டாம் என்று வெளியில் மார்த்தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு
இதை நினைவூட்ட விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

உற்சாக மிகுதியில் மாநிலத்தின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் ஊறு
விளைவிக்க வேண்டாம் என்று அத்தரப்பினரை தாம் வலியுறுத்திக்
கேட்டுக் கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பான நிர்வாகத்தின்
மீது நம்பிக்கை கொண்டு மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தயாராக உள்ளதாகவும் அவர்
சொன்னார்.


Pengarang :