SELANGOR

கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளும்

கிள்ளான், ஜூன் 7- கிள்ளான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு
வரும் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும்
வகையில் ஆர்.டி.பி. எனப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை இயற்கை
வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு விரைவில்
மேற்கொள்ளும்.

வெள்ளத் தடுப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள வடிகால்களைத் துப்புரவு செய்யும் பணிகள் அடிக்கடி
மேற்கொள்ளப்படும் என்று அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது
கூறினார்.

நீண்ட கால நடவடிக்கையாக ஆர்.டி.பி. திட்டத்தின் கீழ் சுங்கை பத்து
அனாம், சுங்கை காப்பார் கிச்சில், சுங்கை காப்பார் பெசார் ஆகிய ஆறுகள்
தரம் உயர்த்தப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பண்டார் புக்கிட் ராஜா
பகுதிக்குப் பணி நிமித்த வருகை மேற்கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்த கன மழை காரணமாகப்
பெக்கான் மேரு மற்றும் பண்டார் புக்கிட் ராஜா ஆகிய பகுதிகளில்
கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு பகுதிகளில் உள்ள 50 முதல் 100
வீடுகள் 0.1 மீட்டர் முதல் 0.5 மீட்டர் வரை வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் 20 குடும்பங்கள் தற்காலிக நிவராண மையங்களில் அடைக்கலம்
நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதற்கு மூன்று மணி
நேரத்திற்கு இடைவிடாமல் பெய்த மழை மற்றும் கடல் பெருக்கு
ஆகியவை காரணமாக விளங்கியதாக நிக் நஸ்மி தெரிவித்தார்.


Pengarang :