NATIONAL

பெண் வாகனமோட்டியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட ஆடவர் விசாரணைக்காகத் தடுத்து வைப்பு

ஈப்போ, ஜூன் 7- கேமரன் மலையிலிருந்து தாப்பா செல்லும் சாலையில்
பெண் காரோட்டுநரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக நம்பப்படும்
ஆடவரை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செர்டாங் வட்டாரத்தில் போலீசார்
கைது செய்தனர்.

செர்டாங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும்
அந்த 29 வயது ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 323/506/501 பிரிவுகளின்
கீழ் விசாரணைக்காகத் தாப்பா மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்குக்
கொண்டு வரப்பட்டதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ
முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய அப்பெண் சுங்கை பூலோ,
சவுஜானா உத்தாமா போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 10.00
மணியளவில் புகார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் 17 வயது சகோதரரும் நேற்று
முன்தினம் மாலை 5.33 மணியளவில் கேமரன் மலையிலிருந்து தாப்பா
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக
அவர் சொன்னார்.

சாலையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு காரணமாக அந்த ஆடவர்
தனது காரை நிறுத்திவிட்டு அப்பெண்ணின் காரை நோக்கி வந்து காரின்
கண்ணாடியை இறக்கும்படி பணித்துள்ளார்.

அப்பெண் கண்ணாடியை இறக்கியதும் கடுமையான வார்த்தைகளால்
திட்டிய அவ்வாடவர், அவரை தலையில் தாக்கியதோடு எச்சரிக்கும்
தொனியிலும் வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார் என்று முகமது யூஸ்ரி
குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற கார் தஞ்சோங் காராங் முகவரியில் உள்ள
ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது சோதனையில்
கண்டறியப்பட்டது என்றார் அவர்.

அந்த ஆடவர் தன் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணின் காரை நோக்கி
வந்து அவரை கடுமையாகத் திட்டியதோடு தலையில் அடிப்பதை
சித்தரிக்கும் 59 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப்
பகிரப்பட்டது.


Pengarang :