NATIONAL

10 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மாவட்டப் போலீஸ் தலைவர் கைது

குவாந்தான், ஜூன் 7- பகாங் மாநிலத்திலுள்ள மாவட்டப் போலீஸ் தலைவர்
ஒருவரை ஊழல் தடுப்பு ஆணைய (எஸ்.பி.ஆர்.எம்.) அதிகாரிகள் கைது
செய்துள்ளதை மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஓத்மான்
நேற்று உறுதிப்படுத்தினார்.

எஸ்.பி.ஆர்.எம்.மின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தாங்கள்
தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தவறான
நடவடிக்கைகள் மற்றும் குற்றச்செயல்கள் உள்பட எந்தவொரு சட்டத்திற்குப்
புறம்பான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பகாங் மாநிலக்
காவல் துறை ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த 53 வயது அதிகாரிக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை
எஸ்.பி.ஆர்.எம். தரப்பு இன்று பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்து
பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடந்த 2017 முதல் 2022 வரை 10 லட்சம்
வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை அந்த மாவட்டப் போலீஸ் தலைவர்
லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.


Pengarang :