இரண்டு நாள் பணி நிமித்த பயணம் மேற்கொண்டு இந்தோ. அதிபர் மலேசியா வருகை

சிப்பாங், ஜூன் 8-  இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று மலேசியா வந்தடைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அந்த குடியரசு நாட்டிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த அழைப்பை ஏற்று அதிபர் ஜோக்கோவி இந்த வருகையை மேற்கொண்டுள்ளார்.

அதிபர் ஜோக்கோவி, அவரின் துணைவியார் இரியானா ஜோக்கோ விடோடோ மற்றும் பேராளர் குழுவினர் பயணம் செய்த விமானம் நேற்று மாலை 3.40 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா முனையத்தை வந்தடைந்தது.

அதிபர் ஜோக்கோவி தலைமையிலான பேராளர் குழுவை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் வரவேற்றார். மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் ஹெர்மோனோவும் உடனிருந்தார்.

கேப்டன் முகமது ஷாப்ரான் அல்-அகமது தலைமையிலான முதலாவது அரச ரேஞ்சர்ஸ் பட்டாளத்தின் 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை அதிபர் ஜோக்கோவி பார்வையிட்டார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அதிபர் ஜோக்கோவி இன்று புத்ரா ஜெயாவில் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இஸ்தானா நெகாரா வில் நடைபெற இருக்கும் அரச விருந்தில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடன் அதிபர் கலந்து கொள்வார்.


Pengarang :