NATIONAL

ஜே.கே.ஆர். வசமுள்ள சிறு அடிப்படை வசதித் திட்டங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படும்-பிரதமர்

புத்ரா ஜெயா, ஜூன் 12- பழுதடைந்த பள்ளிகளைச் சீரமைப்பது உள்ளிட்ட
சிறு அடிப்படை வசதித் திட்டங்களை மேற்கொள்ளும் பொறுப்பு
பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்.) வசமிருந்து வேறு துறைகளுக்கு
அல்லது மாவட்ட அலுவலங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
அலெக்சாண்டர் நந்தா லிங்கியுடன் தாம் பேச்சு நடத்தியுள்ளதாகக் கூறிய
அவர், பழுடைந்த பள்ளிகள், கிளினிக்குகளைச் சீரமைப்பது மற்றும்
கழிப்பறைகளைப் பழுதுபார்ப்பது போன்ற பணிகளை வழங்குவதன் மூலம்
அதிக பொறுப்பினை சுமந்து கொண்டிருக்கும் பொதுப்பணி இலாகாவுக்கு
மேலும் சுமையை ஏற்படுத்தக்கூடாது என தாம் எடுத்துரைத்ததாகச்
சொன்னார்.

இதன் காரணமாக இந்த பணிகளை வேறு துறைகளுக்கு அல்லது மாவட்ட
அலுவலகங்களுக்கு மாற்றும்படி தாம் பரிந்துரைத்துள்ளேன் என்று இன்று
இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் ஜூன் மாதத்திற்கான சந்திப்பு
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

பொதுப் பணி இலாகா தற்போது பெரிய அளவிலான மேம்பாட்டுப்
பணிகளையும் சாலை, கட்டிடம், துறைமுகம், விமான நிலையம்,
படகுத்துறை போன்ற அமைச்சுகள், இலாகாக்கள், அரசு நிறுவனங்கள்
சம்பந்தப்பட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும்
மேற்கொண்டு வருகிறது.

இது தவிர, கால்வாய்களைத் துப்புரவு செய்வது, சாலைகளைச்
செப்பனிடுவது, கூட்டரசு அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது போன்ற
திட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் பொதுப்பணி இலாகா
ஏற்றுள்ளது.


Pengarang :