NATIONAL

புதிதாகப் பிறந்த குழந்தை கோழிக் கூண்டில் கண்டுபிடிப்பு

லஹாட் டத்து, ஜூன் 13- இங்குள்ள கம்போங் ஜாவா பகுதியில் உள்ள கோழிக்
கூட்டில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாலை 6.30 மணியளவில் 51 வயது முதியவர் தனது கோழிக் கூண்டை பார்க்க
வந்த போது அந்தக் குழந்தையைக் கண்டார். சம்பவம் குறித்து கிடைத்த புகாரின் பேரில்
லஹாட் டத்து மாவட்டக் காவல்துறை தலைமையகத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக லஹாட் டத்து மாவட்டக்
காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் டாக்டர் ரோஹன் ஷா அகமது கூறினார்.

மூன்று கிலோ எடையுள்ள குழந்தை மருத்துவப் பரிசோதனைக்காக லஹாட் டத்து
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்
போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்த பாதுகாவலர் குழந்தையைக் கைவிட
முயன்றக் குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார் அவர்.


Pengarang :