NATIONAL

மாஸ்விங்ஸ் நிறுவனத்தைக் கொள்முதல் செய்ய சரவாக் கொள்கையளவில் இணக்கம்

கூச்சிங், ஜூன் 15- மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான
மாஸ்விங்ஸ் நிறுவனத்தைக் கொள்முதல் செய்ய சரவாக் அரசாங்கம்
கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விமான நிறுவனம் “பூட்டிக்
ஏர்லைன்“ என மறுபெயரிடப்படும் என்று சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ
அபாங் ஜோஹாரி துன் ஓபேங் கூறினார்.

தற்போது போர்னியோவின் உட்புறப் பகுதிகளுக்கு மட்டும் சேவையை
வழங்கி வரும் இந்த நிறுவனத்தில் கூடுதல் விமானங்கள் சேர்க்கப்பட்டு
நிலையான விமான எரிபொருள் பயன்படுத்தப்பட்டு அதன் தோற்றத்திற்குப்
புத்துயிரூட்டப்படும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் உள்ளிட்ட உள்நாட்டுச் சேவையையும் சிங்கப்பூர் போன்ற
நாடுகளை உட்படுத்திய அனைத்துலக சேவைகளையும் நாங்கள்
விரிவுபடுத்தவுள்ளோம்.

விமான நிறுவனத்திற்குப் புதிய தோற்றத்தை ஏற்படுத்துவது இரண்டாம்
பட்ச நடவடிக்கையாகும். டிக்கெட் விலையைக் கட்டுப்பாட்டில்
வைப்பதுதான் எங்களின் பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டார்.

சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான ஸ்கைவேய் சென். பெர்ஹாட்
நிறுவனத்திற்கும் பெட்ரோலிய ஏற்பாட்டு குத்தகையாளர்களுக்கும்
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடம் சடங்கை
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இந்த விமான நிறுவனத்தை கொள்முதல் செய்வது தொடர்பான பரிந்துரை
மத்திய அரசிடம் அண்மையில் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Pengarang :