NATIONAL

மோட்டார் சைக்கிள் தடங்கள் ஆபத்தானதாக இருந்தால் விரைந்து புகார் செய்வீர்- அமைச்சர் ஆலோசனை

ஷா ஆலம், ஜூன் 15- நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டார் சைக்கிள்
தடங்கள் ஆபத்தானவையாவும் தரம் உயர்த்தப்பட நிலையிலும் இருந்தால்
அது குறித்து உடனடியாகப் புகார் செய்யும்படி மோட்டார் சைக்கிளோட்டிகள்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகையப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக
மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) அல்லது சம்பந்தப்பட்ட
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களிடம் அவர்கள் புகார் தரலாம் என்று
பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நந்தா லிங்கி கூறினார்.

மோட்டார் சைக்கிள் தடங்கள் நல்ல முறையில் இல்லாதது தொடர்பில்
பயனீட்டாளர்களிடமிருந்து நாங்கள் புகார்களைப் பெற்றுள்ளோம்.
தொடர்ச்சியாகப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என அவர்
குறிப்பிட்டார்.

விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பழுதுகள் தொடர்பான
புகார்களை முன்வையுங்கள். மோட்டார் சைக்கிள் தடங்களை பராமரிப்பது
தொடர்பான ஷரத்து ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது என்று அவர்
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளோட்டிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு ஏதுவாக
சிறப்புத் தடங்களை அரசாங்கம் உருவாக்குமா என அலோர்ஸ்டார்
உறுப்பினர் அஃனான் ஹமிமி தாயிப் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு
பதிலளித்தார்.

சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்புக்கும் அரசாங்கம்
உத்தரவாதம் அளிப்பதாகக் கூறிய அமைச்சர், பிரச்சனைகள் ஏதும் எழும்
போது சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு அது உடனடியாக
கொண்டுச் செல்லப்படும் என்றார்.


Pengarang :