NATIONAL

“சிலாங்கூர் மோபிலிட்டி“ திட்டம் எட்டு மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜூன் 15- பொது போக்குவரத்து முறையின் அடைவு
நிலையை மேம்படுத்துவதற்காக மாநில அரசினால் ஆரம்பிக்கப்பட்ட
“சிலாங்கூர் மோபிலிட்டி“ திட்டம் வரும் செப்டம்பர் மாதவாக்கில் எட்டு
மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

கோம்பாக், செலாயாங் மற்றும் பூச்சோங்கில் இத்திட்டம் இதுவரை
அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி, அடர்த்தியான குடியிருப்பு பகுதிகள் மற்றும் குறுகலான சாலைகள்
கொண்ட பகுதிகளை இலக்காக கொண்டு இதர மண்டலங்கள் அடையாளம்
காணப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் பொது போக்குவரத்து முறையை மட்டும் இலக்காக
கொள்ளவில்லை. மாறாக, பஸ் நிறுத்தம், மைக்ரோமோபிலிட்டி, இ-
ஸ்கூட்டர் போன்ற இதர அம்சங்களையும் கவனத்தில் கொண்டுள்ளது
என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மண்டலங்களை நாங்கள் அடையாளம் காணவுள்ளோம்.
எனினும் பொருத்தமான தருணத்திற்காகக் காத்திருக்கிறோம். இத்திட்டத்தில்
செயலிகளும் பயன்படுத்தப்படவுள்ளதால் இதன் அமலாக்கத்திற்கு இரண்டு
முதல் மூன்று மாதங்கள் வரை தேவைப்படும் என்றார் அவர்.

பொது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தால் இந்த திட்டம்
இதர மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் வழி பேருந்து
பயன்பாடு இயல்பாகவே குறைக்கப்பட்டு இதர மண்டலங்களில் கவனம்
செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி  புசார்
கழகத்தின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த
சிலாங்கூர் மோபிலிட்டி ஆய்ரவங்கை இன்று இங்கு தொடக்கி வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :