SELANGOR

நீர் பாதுகாப்பு மற்றும் விநியோகத்தை மூல நீர் உத்தரவாதத் திட்டம் மேம்படுத்தும் – மந்திரி புசார் உத்தரவாதம்

ஷா ஆலம், ஜூன் 15- இவ்வாண்டு பிற்பகுதியில் தொடங்கப்படவிருக்கும்
மூல நீர் உத்தரவாதத் திட்டம் (எஸ்.ஜே.ஏ.எம்.) கிள்ளான்
பள்ளத்தாக்கிலுள்ள லட்சக்கணக்கான மக்களின் தொடர்ச்சியான நீர்
தேவையை உறுதி செய்யும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

மாநிலத்தில் நீர் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய மற்றும் நீர்
வளங்களைப் பாதுகாக்கக்கூடிய ஆக்ககரமான வழிமுறையாக இந்த
திட்டம் விளங்குகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இந்த மூல நீர் ஆதாரத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நீர்
விநியோகம் குறிப்பாக மாசுபாடு மற்றும் அட்டவணையிடப்படாத நீர்
விநியோகத் தடை காலத்தில் சீராக மேற்கொள்ளப்படுவது உறுதி
செய்யப்படும் என்றார் அவர்.

இந்த எஸ்.ஜே.ஏ.எம். திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்
திட்டமிடப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அக்டோபர்
மாதவாக்கில் இப்பணிகள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தாண்டு
தொடக்கத்தில் அது முழுமையாகச் செயல்படும் என அமிருடின் கூறினார்.

சுமார் 16 லட்சம் குடிநீர் கணக்குகளைப் வைத்துள்ள 70 லட்சம் பேருக்கு
நீரை விநியோகம் செய்வதில் இந்த திட்டம் முக்கிய பங்கினை
ஆற்றுகிறது. இது தவிர தொழில்துறைகளுக்குத் தேவையான நீரையும் அது
விநியோகம் செய்கிறது என்றார் அவர்.

இந்த மூல நீர் ஆதாரத் திட்டத்தை அமல்படுத்த 2023ஆம் ஆண்டு வரவு
செலவுத் திட்டத்தில் 33 கோடியே 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.


Pengarang :