NATIONAL

சிலாங்கூர் தேர்தல் – ஹாஜி யாத்திரை செல்லும் முன் சுல்தானுடன் சந்திப்பு நடத்த மந்திரி புசார் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 16 – மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக
சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப்
பெறுவதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்
ஷா அல்ஹாஜ் அவர்களை சந்திக்க மந்திரி புசார் திட்டமிட்டுள்ளார்.

சுல்தான் ஹாஜி கடமையை நிறைவேற்றுவதற்காக மதினா செல்வதற்கு
முன்னர் அவருடன் சந்திப்பு நடத்த தாம் விரும்புவதாக டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், இந்த சந்திப்பை நடத்துவதற்கான பொருத்தமான தேதிக்காகத்
தாம் காத்திருப்பதாக நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மோபிலிட்டி
ஆய்வரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.

சுல்தானுடன் சந்திப்பு நடத்த இயலாது போனால் சட்டமன்ற கலைப்பு
தொடர்பான ஒப்புதலைப் பெறுவதற்காக நான் மதினா செல்வேன்.

இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன்.
அதாவது சுல்தான் அந்த புனித நகருக்குச் செல்வதற்கு முன் அவரை
சந்திக்க முயல்வேன் என்றார் அவர்.

ஹாஜி கடமையை நிறைவேற்றுவதற்காக மேன்மை தங்கிய சுல்தான்
ஷராபுடின் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் அடுத்த
வாரம் சவூதி அரேபியா பயணமாகவுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு வழி விடும் வகையில் மாநில
சட்டமன்றம் கலைக்கப்படவுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், மூன்று தொகுதிகள் தொடர்பான பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலுக்கிடையே பேச்சுவார்த்தை இன்று
அல்லது நாளை நடைபெறும் என்று மாநிலப் பக்கத்தான் ஹராப்பான்
தலைவருமான அமிருடின் சொன்னார்.


Pengarang :