NATIONAL

வெ.37 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- ஈரானியர் உள்பட இருவர் கைது

கேலாலம்பூர், ஜூன் 16 – இங்குள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஈரானியர் உள்பட
இருவரைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 37 லட்சம் வெள்ளி
மதிப்பிலான 143 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி
வரை ஜாலான் சிகாம்புட் அமான் மற்றும் ஜாலான் அம்பாங்கில்
மேற்கொள்ளப்பட்ட இரு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் இந்த
போதைப் பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ்
தலைவர் டத்தோ சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

முப்பத்தொன்பது மற்றும் 48 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும்
போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் கடந்த மே மாதம் முதல்
தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கைகளில் 107.5 கிலோ ஷாபு மற்றும் 34.7 கிலோ
கஞ்சா கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், இந்த போதைப் பொருள்கள்
அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது
என்றார்.

உள்ளுர் சந்தைகளில் விநியோகம் செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட
இந்த போதைப் பொருள்களை ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில்
பதுக்கி வைப்பது இக்கும்பலின் வழக்கமான பாணியாகும் என்றார் அவர்.

இச்சோதனை நடவடிக்கையில் அந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து டோயோட்டா எஸ்திமா மற்றும் புரேடுவா அல்சா ஆகிய இரு கார்களும் 39,500 வெள்ளி
ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :