NATIONAL

இடைத்தரகர்களால் புஸ்பாகோம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், ஜூன் 16- வர்த்தக வாகன சோதனையில் ஏமாற்று வேலைகள்
நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய வாடிக்கையாளர் பிரதிநிதி
திட்டத்தை (PAR) வர்த்தக வாகனப் பரிசோதனை அமைப்பான புஸ்பாகோம்
சென். பெர்ஹாட் அமல்படுத்தவுள்ளது.

இடைத்தரகர்கள் அல்லது ரன்னர்கள் என அழைக்கப்படும் தரப்பினர்
விதிக்கும் அதிகப்படியான கட்டணங்களால் வாடிக்கையாளர்கள்
ஏமாற்றப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காகப் “பார்“ எனும் இந்த திட்டம்
அமல்படுத்தப்படுகிறது.

வாகனப் பரிசோதனை மையங்களில் தங்களின் வர்த்தக வாகனங்களைச்
சோதிப்பதற்குப் பல வாகன உரிமையாளர்கள் இடைத்தரகர்கள் அல்லது
ரன்னர்களின் உதவியை நாடுவதாகப் புஸ்பாகோம் அறிக்கை ஒன்றில்
கூறியது.

ஆயினும், ஒரு சில இடைத் தரகர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும்
விதமாக அதிக கட்டணங்களை விதிப்பதோடு தவறான தகவல்களையும்
வழங்குவதாக அது குறிப்பிட்டது.

இவ்வாறு பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் புஸ்பாகோம்
வெளிப்படையாகச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் புஸ்பாகோமின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது என
அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த “பார்“ முறையின் கீழ் இடைத் தரகர்களின் பின்னணி குறித்த
ஆய்வினை சட்ட அமலாக்கத் தரப்பினரின் உதவியுடன் புஸ்பாகோம்
மேற்கொள்ளும். இதில் தேறியவர்கள் மட்டுமே “பார்“ திட்ட
உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இடைத்தரகர்களின் சேவையைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் “பார்“ சேவையைப் பயன்படுத்தி www.puspakom.com.my என்ற அகப்பக்கம் வாயிலாக அதன் உறுப்பினர்களின் பட்டியலை அறிந்து கொள்ளுமாறு புஸ்பாகோம் கேட்டுக் கொண்டது.


Pengarang :