NATIONAL

வாகனமோட்டியை அச்சுறுத்தியால் தண்டனை பெற்ற நபருக்கு உணவகப் பணியாளர்களை அறைந்த குற்றத்திற்கு மீண்டும் சிறை

கேமரன் ஹைலண்ட்ஸ், ஜூன் 16- இங்குள்ள லாத்தா இஸ்கந்தாரில்
பெண் வாகனமோட்டி ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக
ஏழு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர், உணவகப்
பணியாளர்களை அறைந்த குற்றத்திற்காக மீண்டும் சிறைத்தண்டன
விதிக்கப்பட்டார்.

கேமரன் மலையிலுள்ள உணவகம் ஒன்றின் பணியாளர்களை அறைந்த
குற்றத்திற்காக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முகமது ஜாய்ம்
ஃபாயிஸ் தர்மிஸி (வயத 29) என்ற அந்த ஆடவருக்கு ஒன்பது நாள்
சிறைத்தண்டனை விதித்தது.

தமக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை முகமது ஜாய்ம்
ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒன்பது நாள்
சிறைத்தண்டனையோடு ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 1,000 வெள்ளி
அபராதம் விதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் கஸிரத்துள்ஜன்னா உஸ்மானி
ஓத்மான் தனது தீர்ப்பில் கூறினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது நாள்
சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட்
தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இரு குற்றச்சாட்டுகளுக்குத் தலா ஒன்பது நாள் சிறைத்தண்டனையை
நீதிமன்றம் விதித்தது. ஆயினும் அத்தண்டனையை ஏகாலத்தில்
அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் தானா
ராத்தாவில் உள்ள குளோரி 78 ஸ்டீம்போட் ஸ்னேக் கார்னர் (பேம்பு
பிரியாணி) உணவகத்தில் வி.டேனிஸ் பிள்ளை (வயது 23) என்ற
பணியாளருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக முகமது ஜாய்ம்
மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதே இடத்தில் அதே நேரத்தில் சமிர் தாஸ் எனும் அந்நிய
தொழிலாளருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக அவருக்கு
எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.

லாத்தா இஸ்கந்தார் பகுதியில் பெண் வாகனமோட்டி ஒருவரிடம்
கடுமையாக நடந்து கொண்ட குற்றத்திற்காக இதே நபருக்குத் தாப்பா
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூன் 9ஆம் தேதி ஏழு நாள்
சிறைத்தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :