NATIONAL

உலு சிலாங்கூரில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட உலோக உருக்காலைக்குச் சீல் வைப்பு

ஷா ஆலம், ஜூன் 16- ராசா, ஜூரா தொழில்பேட்டையின் ஜாலான் ஜூரா
3ஏ பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த உலோக உருக்காலை
ஒன்றுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் இம்மாதம் 14ஆம் தேதி
சீல் வைத்தது.

பத்து பேர் கொண்ட அமலாக்கக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தில்
சோதனை மேற்கொண்ட போது உலோகங்களை உருக்கும் இயந்திரங்களில்
சூடாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு திரவமயமாக்கப்பட்ட
உலோகம் சில அச்சு வார்ப்புகளில் சூடான நிலையில் காணப்பட்டதாக
நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

அந்த ஆலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
செல்லத்தக்க வர்த்தக லைசென்ஸ் மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மைக்
கழகத்தின் லைசென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிராதது கண்டு
பிடிக்கப்பட்டது. இது 2007ஆம் ஆண்டு உலு சிலாங்கூர் நகராண்மைக்
கழக வர்த்தக மற்றும் தொழில்துறை துணைச் சட்டத்தின் 3வது பிரிவின்
கீழ் குற்றமாகும் என நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது ஒரு ஃபோர்க்லிப்ட் இயந்திரம்,
தொழில்துறை மின்விசிறி, எரிவாயு சிலிண்டர், டிரோலி 50 போத்தல்
இரப்பர் திரவம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Pengarang :