SELANGOR

2021 முதல் கல்வி மேம்பாட்டிற்காக 2.5 கோடி வெள்ளியை எம்.பி.ஐ. செலவிட்டது

ஷா ஆலம், ஜூன் 19- சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி மேம்பாட்டுத்
திட்டங்களை மேற்கொள்வதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார்
கழகம் கடந்த 2021 முதல 2 கோடியே 55 லட்சம் வெள்ளியைச்
செலவிட்டுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்துவது, பெற்றோர் ஆசிரியர்
சங்க நிகழ்வுகளை நடத்துவது, மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்
திட்டத்தை அமல்படுத்துவது, வறுமை ஒழிப்பு மற்றும் பிரத்தியேக
வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்நிதி
பயன்படுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

எம்.பி.ஐ.யின் நிறுவன சமூக கடப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த
பள்ளிகளுக்கான நிதியுதவித் திட்டம் அமைகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.

மாநில கல்வி இலாகா, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர்
சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதன் தொடர்புடைய
அமைப்புகளின் உதவியுடன் இந்த நிதி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு
விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற கித்தா சிலாங்கூர் கல்வி இலக்குத் திட்ட
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அமிருடின், சிலாங்கூர்
மாநிலத்திலுள்ள அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதி
செய்வதில் மாநில அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகச்
சொன்னார்.

அனைத்துச் சிறார்களுக்கும் சமநிலையான கல்வி வாய்ப்பு கிடைப்பதை
உறுதி செய்ய பாலர் பள்ளி உள்பட அனைத்து நிலையிலும் கல்விக்கு
முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :