SELANGOR

மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்- அமிருடின் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூன் 19- வரும் மாநிலத் தேர்தலில் குறைந்த பட்சம்
மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை இடங்களை பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் பெற
முடியும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் 50 மேற்பட்ட இடங்களை ஆளும்
கூட்டணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தமது ஐந்தாண்டுக்
காலத் தவணையின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்திய சிறப்பு
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டாக விளங்குபவர்கள்
வாக்காளர்களே. இருந்த போதிலும் வெற்றி பெற முடியும் என்ற
நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்கான வியூகங்கள் குறித்து பக்கத்தான்
தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன்
அடுத்த சில தினங்களில் விவாதிக்கவுள்ளோம் என அவர் சொன்னார்.

புதிய பங்காளிகளுடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடைவு நிலையை
மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதோடு வரும் தேர்தலில் 50க்கும்
மேற்பட்ட இடங்களைப் பிடிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

தனது தலைமையிலான நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆற்றிய
சேவைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம்
வெளிப்படுத்துவதாகச் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர்
தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார, அரசியல்
மற்றும் சமூக நெருக்கடிகள் தொடங்கி கடந்த 2020ஆம் ஆண்டில் மத்திய
ஹராப்பான் அரசு கவிழ்வதற்குக் காரணமான ஷெரட்டோன் நகர்வு உள்பட பலவிதமான சவால்களை நாம் எதிர்கொண்டு சமாளித்துள்ளோம் என்றார்
அவர்.

நாம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகளை மூடி மறைக்காமல்
அவற்றுக்குத் தீர்வு கண்ட நமது அரசின் திறன்மிக்க நிர்வாக
அடைநிலையின் அடிப்படையில் வெற்றிக்கான சாத்தியம் மீது நாங்கள்
நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.


Pengarang :