NATIONAL

போலீஸ் சின்னம் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பொது மக்களிடம் மோசடி- காவல் துறை அம்பலம்

ஈப்போ, ஜூன் 20 – போலீஸ் சின்னம் கொண்ட கைது ஆணை அல்லது
ஆஜராகக் கோரும் போலி அறிக்கையை அனுப்புவதன் மூலம்
பொதுமக்களை ஏமாற்றும் புதிய அணுகுமுறையை இணைய மோசடிக்
கும்பல் தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் மற்றும் பெர்லிஸ் மாநிலப் போலீஸ்
தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி இதே பாணியில்
மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் தாங்கள் இரு புகார்களைப்
பெற்றுள்ளதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

தெலுக் இந்தானில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரிடம் இதே
தந்திரத்தைக் கையாண்ட அந்த மோசடிக் கும்பல், “உங்களுக்கு எதிராக
கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது“ என மிரட்டியதாகவும் எனினும்,
சுதாரித்துக் கொண்ட அந்த உரிமையாளர் இது குறித்து உடனடியாக
போலீசில் புகார் செய்ததாகவும் அவர் சொன்னார்.

இந்த சமயோசிதம் காரணமாக அந்த உணவக உரிமையாளர் பண
இழப்பிலிருந்து தப்பினார். எனினும், இரண்டாவது சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் அக்கும்பலின்
அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து 98,000 வெள்ளியை இழந்தார் என முகமது
யூஸ்ரி தெரிவித்தார்.

இவ்விரு மோசடிச் சம்பவங்களும் மிக அண்மையில் நிகழ்ந்துள்ளதாக
அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :