SELANGOR

ஈராண்டு காலத் தாமதத்திற்குப் பின்னர் செட்டி பாடாங் பெயர் மீண்டும் நிலைநிறுத்தம்

கிள்ளான், ஜூன் 20 – இந்தியச்
சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு
மத்தியில் பெயர் மாற்றம் கண்ட
கிள்ளான் செட்டி பாடாங், இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு தனது பழைய
பெயரை மீண்டும் பெற உள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சி குழு முடிவு
மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.
கணபதிராவுடன் நடத்தப்பட்ட
சந்திப்புக்கு பின்னர் இந்த முடிவு
எடுக்கப்பட்டதாகக் கிள்ளான்
நகராண்மைக் கழகத் தலைவர்
நோராய்னி ரோஸ்லான்
தெரிவித்தார்.

டத்தாரான் கிள்ளான் @ செட்டி
பாடாங் என்ற பெயருடன் கூடிய
அலங்கார வளைவு இன்னும் சில
வாரங்களில் அங்கு பொருத்தப்படும்
என்று அவர் சொன்னார்.

இதனிடையே, அந்தத் திடலில் செட்டி
பாடாங் பெயரை பொறிக்கும்
பணிகள் இனியும் தாமதம் அடையக் கூடாது என்று
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
கணபதி ராவ் தி ஸ்டார் பத்திரிகைக்கு
அளித்தப் பேட்டியில் கூறினார்.

செட்டி பாடாங்கிற்குக் கிள்ளான்
நகராண்மைக் கழகச் சதுக்கம் என
பெயரிடப்பட்டதற்குத் தாம் ஆட்சேபம்
தெரிவித்ததைத் தொடர்ந்து இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெயர்
அகற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

மாநில ஆட்சி குழுவின் முடிவின்
அடிப்படையில் அந்தப் பகுதிக்கு
செட்டி படம் என்ற பெயர் மறுபடியும் சூட்டப்படும் என்று
நான் அப்பொழுது வாக்குறுதி
அளித்திருந்தேன் என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 1.34 ஹெக்டர் பரப்பளவில்
அமைந்துள்ள அந்த திடலில்
கிள்ளான் நகராண்மைக் கழகச்
சதுக்கம் என சூட்டப்பட்ட பெயரை
நகராண்மைக் கழகம் கடந்த 2011ம்
ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி
அகற்றியது.

இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக
மையமாக விளங்கி வரும் கிள்ளானில்
உள்ள இந்தத் திடலுக்கு செட்டி
பாடாங் என்ற பெயர் மறுபடியும் சூட்டப்பட
வேண்டும் என்று இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த
அனைத்து தரப்பினரும் கோரிக்கை
விடுத்திருந்தனர்.

தமிழ்நாட்டின் செட்டியார்
சமூகத்தைச் சேர்ந்த வணிகர்கள்
கடந்த 1940 ஆம் ஆண்டுகளில்
மாட்டு வண்டிகளில் அங்கு உப்பு
வியாபாரம் செய்ததன்
அடையாளமாக அந்தத் திடலுக்குச்
செட்டி பாடாங் என பெயர்
சூட்டப்பட்டது.

இந்தத் திடல் விளையாட்டுத்
துறையில் பல சாதனைகளைப் புரிந்த பல விளையாட்டாளர்களுக்குப்
பயிற்சி மையமாகவும் விளங்கியது.

இந்தத் திடலையொட்டி 150
ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ
நகரத்தார் தண்டாயுதபாணி
ஆலயமும் வீற்றிருக்கிறது.


Pengarang :